பாடசாலையில் மதிய உணவு உட்கொண்ட மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
மட்டக்களப்பு, எல்லைக் கிராமமான வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், மாணவர்களுக்கு இன்று வழங்கப்பட்ட உணவை உண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமுற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், மயக்கமடைந்த மாணவர்கள் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 9 வரையான 64 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு, கல்வி அமைச்சின் மதிய போசன உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், உணவை தனியார் ஒருவரிடமிருந்து பெற்று பாடசாலை நிர்வாகம் வழங்கி வருகின்றது.
வழமைபோல இன்று காலை சோறும், சோயாமீற் கறியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதையடுத்து, அதனை மாணவர்கள் உட்கொண்ட பின்னர் சில மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததனால், அங்கு மாணவர்களுக்கிடையே பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து வாந்தியெடுத்த 9 மாணவர்களையும் உடனடியாக வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் மாணவர்கள் மயக்கமடைந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.