யாழ் ஆலயத் திருவிழாவில் அதிக வெளிச்சம்; நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில்
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பிரான்பற்று, பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்றைய உற்சவத்தின்போது அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு ஆலயத்தில் இசை நிகழ்வின்போது அதிக சக்திகொண்ட லேசர் லைற் வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர்
இதனால் கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்கள், தாதியர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேநேரம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் எந்தவித பதற்றமும் இன்றி உடன் வைத்தியசாலையை நாடலாம் அதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் தயார. நிலையில் உள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேநேரம் ஆலய திருவிழாவின்போது மின் இணைப்புக்களை வழங்கியவர்கள் இளவாலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை ஆலய திருவிழாக்கள் தற்போது கேளிக்கை கூடமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.