போதைப்பொருள் குற்றச்சாட்டு; பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஆயுள்தண்டனை
ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அம்பாறை அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு , கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜுட்சன், பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

போதைப்பொருளுடன் கைது
2019 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அட்டாளைச்சேனை பகுதியில் 7 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன்விளக்க விசாரணையின் போது பிரதிவாதி தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டார். சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் குறித்த வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.
இருதரப்பு சமர்ப்பணங்களின் பின்னர், பிரதிவாதியான பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஆயுள் தண்டனையை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.