பெண் சுற்றுலா பயணியிடம் கைவரிசையை காட்டிய முன்னாள் பொலிஸ் அதிகாரி ; சினிமா பாணியில் சம்பவம்
வேன் ஓட்டுநராகப் பணியாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் அல்ஜீரிய பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது 800,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் திருடி, பெண்ணை ராவண எல்ல அருகே ஒரு பள்ளத்தில் இருந்து தள்ளிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரா அர்ரார் என்ற 26 வயதுடைய பெண், மே 7ஆம் திகதி இலங்கைக்கு வந்து, கண்டிக்குச் சென்று, பின்னர் நுவரெலியாவுக்கு சென்றுள்ளதுடன் நுவரெலியாவில் இருந்து எல்ல பிரதேசத்திற்கு பயணிக்க ஒரு வேனை online ஊடாக முன்பதிவு செய்துள்ளார்.
ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி
இந்த பயணத்தின் போது, நுவரெலியா ஓட்டுநர் குறித்த பெண்ணுக்கு பழ பானம் கொடுத்துள்ளதுடன், அதன் பிறகு அவர் சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் சந்தேக நபர், ராவண எல்ல அருகே ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு வேனை ஓட்டிச் சென்று, மயக்கமடைந்த பெண்ணை வாகனத்திலிருந்து வெளியே எடுத்து, 30 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு, அவரது பணம் மற்றும் உடமைகளுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காயங்கள் இருந்தபோதிலும், சுற்றுலாப் பயணி சுயநினைவு அடைந்து, பல கிலோமீட்டர் தூரம் தாண்டி எல்ல பொலிஸ் நிலையத்திற்கு நடந்து சென்று, முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் அதன் பின்னர் அவர் சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட, எல்ல பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் சுமார் 500,000 மதிப்புள்ள இரண்டு தொலைபேசிகளை மீட்டுள்ளனர். வேனையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் மகஸ்தோட்டையைச் சேர்ந்த 70 வயதான ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி எனவும் தற்போது வாடகை வேன் ஓட்டுநராக பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.