பிரித்தானியாவை மீண்டும் மிரட்டும் ஆபத்து: எச்சரிக்கை விடுத்த சுகாதார பிரிவு
ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைய ஆரம்பித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக வெகுவாக குறைந்திருந்த கொரோனா தொற்று பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் மிகவும் வேகமாக பரவு ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒவ்வொரு 20 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உட்பட, அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் பாதுகாப்பிற்காக ஸ்பிரிங் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.
இருப்பினும், கொரோனா தடுப்பூசிகள் கடுமையான நோய் பரவலை தடுக்க உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
BA.2 என அழைக்கப்படும் ஒமிக்ரோன் திரிபின் எளிதில் பரவக்கூடிய துணை மாறுபாடு, இப்போது பெரும்பாலானவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை தளர்த்தியமை மற்றும் கொரோனா தடுப்பூசிகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்றவையும் நோய் தொற்றாளர்களின் உயர்வுக்கான காரணிகளாக இருக்கலாம்.
இதனிடையே, ஸ்காட்லாந்தில் தொடர்ச்சியாக ஏழு வாரங்களாக நோய்த்தொற்று அளவுகள் அதிகரித்துள்ளன. இதேவேளை, கொரோனா கட்டுப்பாடுகளை பிரித்தனியா தளர்த்தி வருகின்றது.
பிரித்தானியாவிற்கு வருபவர்களுக்கு தடுப்பூசி போடப்படாவிட்டாலும், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.