ஆசியாவின் மிக உயரமான கட்டடத்தில் ஏறி சாதனை படைத்த வீரர்
ஆசியாவின் மிக உயரமான கட்டடத்தின் உச்சி வரை ஏறி, மலையேற்ற வீரர் அலெக்ஸ் ஹோனோல்ட் சாதனை படைத்துள்ளார். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல், அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் அலெக்ஸ் ஹோனோல்ட் மிகப்பெரிய கட்டடங்களில் ஏறி சாதனை படைத்து பிரபலமடைந்தவர்.

இவர் தற்போது தனது நீண்ட நாள் கனவாக இருந்த தைவானைச் சேர்ந்த உயரமான கட்டடத்தில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ஏறி சாதனை படைத்துள்ளார்.
தைவான் தலைநகர் தைபேயில் 101 தளங்களை உடைய உயரமான கட்டடம் அமைந்துள்ளது. இரும்பு, கண்ணாடி மற்றும் கான்கிரீட் தூண்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டடம் மூங்கிலைப்போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
508 மீ (1,667 அடி) உயரமுடைய இக்கட்டடத்தில், கயிறு, கையுறை போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி உச்சிவரை ஏறியுள்ளார். தரையில் இருந்து ஒரு மணிநேரம் 31 நிமிடங்களில் இவர் உச்சியை அடைந்துள்ளார்.
இதற்கு முன்பு பிரான்ஸை சேர்ந்த அலைன் ராபர்ட், 101 தளங்களையுடைய இக்கட்டடத்தில் கயிறு, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி 4 மணிநேரத்தில் உச்சியை அடைந்ததே சாதனையாக இருந்தது. இவரின் இந்த சாதனையை ஹோனோல்ட் தற்போது முறியடித்துள்ளார்.