இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர்
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ (Landau) தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்த்து மற்றும் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

எரிக் மேயர் (Eric Meyer) , தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு மூத்த வெளியுறவுச் சேவை அதிகாரியாவார். தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார்.
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் எரிக் மேயரை (Eric Meyer) வரவேற்றுள்ளதோடு, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தூதரகக் குழு ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் எரிக் மேயரின் (Eric Meyer) பதவிக் காலம் கவனம் செலுத்தும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.