தடுப்பூசி போடாமல் நாட்டிற்குள் நுழைந்த பெண்; விசாரணைக்கு வலியுறுத்து!
தடுப்பூசி போடப்படாத நிலையில், ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளான பெண் எப்படி நாட்டிலிருந்து வெளியேறி, எப்படி நாட்டுக்குள் பிரவேசித்தார் என்பது குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)வலியுறுத்தியுள்ளது.
கொவிட் செயலணியிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
சுகாதார பணிப்பாளர் நாயகம் வழங்கிய தொடர்ச்சியான சுகாதார வழிகாட்டுதல்களின்படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய முடியும்.
எனினும் குறித்த பெண் நைஜீரியாவில் இருந்து நாட்டிற்குள் பிரவேசித்தது பிரச்சினைக்குரிய விடயம் எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை ஒமிக்ரோன் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதையும் பரவுவதையும் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்றும் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஏற்கனவே புதிய கடுமையான கொரோனா மாறுபாடுகளைக் கட்டுப்படுத்த சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.