இங்கிலாந்து டெஸ்ட் தொடர்... கவலை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணி!
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் ஒகஸ்ட் 21 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 10 திகதி வரை இடம்பெறவுள்ளது.
இவ்வாறான நிலையில், பிரித்தானியாவில் பல்வேறு நகரங்களில் வெடித்துள்ள புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலவரம் காரணமாகப் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அங்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி கவலை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் சபையானது, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கெட் தொடருக்கு முந்தைய பயிற்சிக்காக ஏற்கனவே பிரித்தானியா சென்றுள்ள வீரர்கள் அமைதியின்மை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போது பிரித்தானியாவில் உள்ள 7 வீரர்கள் மற்றும் 2 துணை ஊழியர்கள் கொண்ட குழு தமக்குச் சிறந்த பாதுகாப்பை ஏற்பாடு செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனினும் அது தொடர்பில் தமக்கு இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் விரைவாகப் பதிலளித்து, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.