மாணவர்களின் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்திலிருந்து, மீண்டும் வீட்டுக்குச் செல்லும் வரையும், பொது போக்குவரத்து என்பவற்றை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பாடசாலை ஊடாக கொரோனா தொற்று பரவுவதைத் தவிர்க்க முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவித்தது,
மேலும், பாடசாலை மாணவர்கள் உபயோகிக்கக் கூடிய தரத்தில் உயர்ந்த ஒரு சந்தர்ப்பத்திற்கும் அதிகமாக பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை வழங்குமாறு பரிந்துரைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட ஏதேனுமொரு நோய் அறிகுறி காணப்படுமாயின் அது குணமடையும் வரை அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பாடசாலை ஊடாக கொரோனா பரவுவதைத் தவிர்க்க முடியும்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதி இருந்தும், இதுவரையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் இருந்தால் அவர்களை துரிதமாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தடுப்பூசியைப் பெறாதவர்கள் எந்த வயது பிரிவினராகக் காணப்பட்டாலும் அவர்கள் ஆபத்துடையவர்களாகவே கருதப்படுவர் என்றார்.