மின்னஞ்சல் தரவுத்தள அழிப்பு ; சர்வதேச நிபுணர்கள் உதவியை நாடும் இலங்கை
எக்ஸ்-பிரஸ் பேர்ள் (X-Press Pearl) கொள்கலன் கப்பலின் மின்னஞ்சல் தரவுத்தளத்தை அழித்து, கொழும்பு துறைமுகத்தின் துறைமுக மாஸ்டரை தவறாக வழிநடத்த முயன்றவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயத்தில் தடயவியல் கணக்காய்வை நடத்த தகுதி வாய்ந்த சர்வதேச நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவது குறித்து நீதி அமைச்சு இன்றைய தினம் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளது.
உள்ளூர் தொழில்நுட்ப நிபுணத்துவம் அத்தகைய விரிவான கணக்காய்வை நடத்த போதுமானதாக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தடயவியல் கணக்காய்வை நடத்த சர்வதேச உதவியை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க கோரியிருந்தார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட எக்ஸ்-பிரஸ் பேர்லின் உள்ளூர் முகவரான சீ கொன்சார்டியம் லங்காவின் மூன்று ஊழியர்களை இந்த வாரம் பிணையில் செல்ல, கொழும்பு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
சந்தேக நபர்கள் தலா 2.5 மில்லியன் ரூபாய் சொந்தப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
முன்னதாக, இலங்கைக்கு ஏற்பட்ட சேதத்துக்காக, கப்பலின் உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் உள்ளூர் முகவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகையின் முதல் தவணை செப்டம்பர் 25 ஆம் திகதி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.