எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து: ஒன்று திரண்ட கனடா மக்கள்
டிரம்ப் நிர்வாகத்திற்கும் கனடாவிற்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில், எலன் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் மனுவில் லட்சக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஐந்து நாட்களுக்கு முன்பு கையெழுத்துகளுக்காக திறக்கப்பட்ட இந்த மனுவில், எலன் மஸ்க் கனடாவின் தேசிய நலனுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், அதன் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை
தென்னாப்பிரிக்காவில் பிறந்த மஸ்க், கனேடிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இரண்டையும் கொண்டுள்ளார்.
இவற்றுக்கு மத்தியில் எலன் மஸ்க் "கனடா ஒரு உண்மையான நாடு அல்ல." என எக்ஸ் வலைபக்கத்தில் பதிவிட்டு, அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது. இதன் காரணமாக கனேடிய மக்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அந்த மனுவில் , அவர் தனது செல்வமும் அதிகாரமும் பயன்படுத்தி கனேடிய தேர்தல்களை பாதித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் "இப்போது கனேடிய இறையாண்மையை அழிக்க முயற்சிக்கும் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தின் உறுப்பினராகிவிட்டார்" என்றும் கூறப்பட்டுள்ளது.
இம் மாதம் 20 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மனுவில் ஏற்கனவே 250,000 க்கும் மேற்பட்ட கனடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.