ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு!
வடக்கின் மிகப்பெரும் உப்பளமாக இருந்து ஆனையிறவு உப்பளம் உள்நாட்டு போரினால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலை மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவதாக தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்தார்.
1937 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் இன்று முதல் (29) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஆனையிறவு உப்பு எனும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.