இன்று முதல் அமுலுக்கு வரும் மின்சார திருத்தச் சட்டமூலம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் கைச்சாத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ள நிலையில் நாட்டில் மின்சார திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.
2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தினைத் திருத்துவதற்கான இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தில் இன்று (15) தனது கையொப்பத்தையிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலம் அண்மையில் (09) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மின்சாரப் பிறப்பாகத்திற்கு விலைகோரும் நடைமுறையொன்றில் பங்குபற்றுவதற்கு எவரேனும் இதன் மூலம் அனுமதிக்கப்படுவர்.
அதற்கமைய 25 மெகாவோட் மின்சாரப் பிறப்பாக்கக் கொள்வனவுக்கு மேலாக மின்சாரப் பிறப்பாக்கத்திற்கு பிறப்பாக்கும் உரிமையொன்றை வழங்குவதற்காக விண்ணப்பிப்பதற்கு தடையாகவிருப்பதற்கு ஆளொருவர் மீது விதிக்கப்பட்ட மட்டுப்பாட்டை இல்லாதாக்குவதற்கும் பிறப்பாக்கக் கொள்ளளவின் மீதான ஏதேனும் வரையீடின்றி அதற்காக விண்ணப்பிப்பதற்கும் அனுமதிப்பதும் இதன் ஊடாக இடம்பெறும்.
இதற்கமைய இன்று (15) முதல் இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டம் 2022ஆம் ஆண்டு 16ஆம் இலக்கச் சட்டமாக இலங்கைச் சட்டக் கட்டமைப்பில் இணைந்துகொள்கிறது.