சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கையின் சிறப்பான திட்டம்! அமைச்சர் அறிவிப்பு
சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
இந்த திட்டமானது இயக்க மற்றும் பரிமாற்றம் (BOT) முறையின் கீழ் நிர்மாணிக்கப்படும் என்றும், அதற்கு பொருத்தமான முதலீட்டாளர் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவித்தார்.
உலகின் 6 அவது உயரமான புகையிரத நிலையமான கந்தபொல புகையிரத நிலையம் உட்பட பல புகையிரத நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த புகையிரத பாதை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனூடாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு பாரிய வசதிகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, பல புதிய ரயில் நிலையங்களை உள்ளடக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.