மியான்மர் நிலநடுக்கத்தில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி
மியான்மர் நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த 28 ஆம் திகதி மதியம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நிலநடுக்கம் நகரின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை அடியோடு சாய்த்தது. விமான நிலையம், சாலைகள் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் உருக்குலைந்தன.
3000 த்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே நகரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்து உள்ளது.
பல நாடுகளின் உதவியுடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று தலைநகர் நேபிடாவில் 63 வயது மூதாட்டி ஒருவரை, மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை மீட்பு குழுவினர் இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.
மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்ந்துள்ளதுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 4,500 பேர் காயமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.