NPPக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவளிக்காது ; டக்ளஸ் காட்டம்
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவளிக்காது என அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போலி வாக்குறுதிகளையோ சன்மானங்களையோ வாக்காளர்களுக்கு கொடுக்காமல், வழமை போன்று தமது நிலைப்பாடுகளை வெளிப்படையாகக் கூறி மக்களிடம் சென்றதால், அதற்கான பெறுபேறுகள் கிடைத்துள்ளதாக டக்ளஸ் தேவானந்த குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் உள்ளூராட்சி மன்றங்களில், ஆட்சியில் பங்கெடுக்கும் விருப்பம் தங்களுக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தேசிய நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு என்பதை ஏற்படுத்தாமல் போயுள்ளதுடன், அவற்றை மறுத்து வருவதனால் உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவை தாம் வழங்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஏனைய தமிழ் கட்சிகளுக்கான ஆதரவும் அவர்கள் அதிகாரபூர்வமாகக் கோரும் பட்சத்தில் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும்.
இது கட்சியின் எதிர்காலம் மற்றும் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்