எல் நினோ காலநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்போது உருவாகி வரும் எல் நினோ காலநிலை வடிவம் மேலும் வலுவடைந்தால், எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் வறட்சியான காலநிலை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் எல் நினோ நிலைமை ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வளிமண்டலவியல் அமைப்பு விடுத்துள்ள கணிப்புகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
எதிர்வரும் மாதங்களில் எல் நினோ நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 82% இற்கும் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தற்போதைய கணிப்புகள் காட்டுகின்றன என அதன் பதில் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
எல் நினோ நிலைமை தீவிரமடைந்தால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாட்டின் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறையும் என்றும், அதன் காரணமாக அந்த காலப்பகுதியில் வறட்சி நிலவ வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக எல் நினோ நிலைமைகள் 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கக்கூடியவை என்பதால், இலங்கையின் மீதான அதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஆரம்பம் வரை தொடரக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
"இவ்வாறானதொரு எல் நினோ நிலைமை ஏற்பட்டால், அதன் விளைவுகள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
மேலும், நவம்பர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியில் இதுவொரு 'வலுவான எல் நினோ' நிகழ்வாக மாறுவதற்கு 40% வாய்ப்புகள் உள்ளதாகக் கணிப்புகள் காட்டுகின்றன" என பதில் பணிப்பாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.