அதிகரிக்கபோகும் முட்டை விலை ; வெளியான தகவல்
உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நாட்களில் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் முட்டை ஒன்றின் சில்லறை விலையானது 47 ரூபாவுக்கும் 48 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலைக்கு உயர்வடைந்துள்ளது.

முட்டை உற்பத்தி
விலங்குகளின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையும் சந்தையில் முட்டையிடும் கோழிகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு, அவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க அளிக்கப்படும் உணவு குறைவடைந்துள்ளமையும் முட்டை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது,
கோழிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் உணவுகள் சந்தையில் குறைவடைந்துள்ளதால் விலங்குகளுக்கு முறையான உணவு வழங்க முடியாதுள்ளதுடன், இதனால் எதிர்காலத்தில் முட்டை உற்பத்தி மேலும் குறையக்கூடும். மேலும், இத்தொழில் துறை மீது அரசாங்கத்தின் கவனம் திரும்ப வேண்டும்.
அத்துடன், மக்காச் சோளம் இறக்குமதிக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் விலங்கு உணவுக்காக மக்காச்சோளத்தை பெற்றுக்கொள்வது நெருக்கடியாகியுள்ளதுடன், அவற்றின் விலைகளும் சுமார் 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தினசரி முட்டைத் தேவை 95 இலட்சமாக உள்ளபோதிலும், நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மேற்குறிப்பிட்ட காரணங்களால் தற்போதைய தினசரி முட்டை உற்பத்தி 70 இலட்சமாகக் குறைந்துள்ளது என்றார்.