கல்வி - வெளிவிகார அமைச்சர்கள் திடீர் தீர்மானம்
வெளிவிவகார அமைச்சர் - பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பீரிஸ் மற்றும் கல்வி அமைச்சர் - தினேஷ் குணவர்தன ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்துள்ளனர்.
தமது அமைச்சுச் செயலாளர்களுடன் இணைந்து செயற்பட முடியாத நிலையிலேயே இவ்வாறு அமைச்சுப் பதவிகள் தொடர்பில் தீர்மானம் எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி செயலகம், பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்களது அமைச்சுக்களின் செயலாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படாவிடின் உறுதியான தீர்மானத்தை எடுக்க நேரிடும் என அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பேராசிரியர் கபில பெரேரா கல்வி அமைச்சின் செயலாளராகவும், அட்மிரல் ஜயந்த கொலம்பகே வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் உள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்கொட்லாந்துக்கு செல்வதற்கு முன்னர், பேராசிரியர் பீரிஸ் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக லண்டன் சென்றிருந்தார். அவருடன் அவரது தனிப்பட்ட உதவியாளராக ஜி.எல்.கம்லத்தும் இணைந்திருந்தார்.
எனினும் அமைச்சருடன் அவரது தனிப்பட்ட ஊழியர்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று அட்மிரல் கொலம்பகே உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, லண்டனில் இருந்து ஸ்கொட்லாந்துக்கான பயணத்திலிருந்து கம்லத்தின் பெயர் நீக்கப்பட்டது. எனினும் அதை பொருட்படுத்தாமல் வெளிவிவகார அமைச்சர் கம்லத்தை ஸ்கொட்லாந்துக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
தனது வயதைக் கருத்தில் கொண்டு தனிப்பட்ட உதவியாளர் ஒருவர் தன்னுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என என அமைச்சர் பீரிஷ் அழுத்தமாக வலியுறுத்தியிருந்ததாக தெரியவருகிறது. இதேவேளை, அமைச்சர் தனது தனிப்பட்ட ஊழியரை லண்டன் அழைத்துச் செல்ல முடியாது எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே, தான் அண்மையில் மொஸ்கோவுக்குச் சென்றபோது தனிப்பட்ட உதவியாளர் ஒருவரை அழைத்துச் சென்றதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிளாஸ்கோ காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றுவதற்கு முன்னதாகவே அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் இடையிலான மோதல் வலுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. அமைச்சின் செயவலாளரின் செயற்பாடுகள் குறித்து ஆத்திரமடைந்த வெளிவிவகார அமைச்சர், இது குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்தையும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கும் அவரது அமைச்சின் செயலாளருக்கும் இடையிலும் முரண்பாடுகள் தொடர்கின்றன. இந்நிலையில் தனது அமைச்சின் செயலாளருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பதவிக்கு வேறொரு நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தினேஸ் குணவர்தன பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்தப் பதவிக்கு ஒருவருடைய பெயரை அவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.