மஹிந்த இதற்கு பொறுப்புக்கூறத் தேவையில்லை! நாமல் ராஜபக்ஷ
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தில் எடுக்கப்பட்ட நிறைய தீர்மானங்களில் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சம்பந்தப்பட்டிருக்கவில்லை. என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மஹிந்த பொறுப்புக்கூறத் தேவை இல்லை." எனவும அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"காலிமுகத்திடல் போராட்டத்தால் மஹிந்த ராஜபக்சவின் பெயருக்கு ஏற்பட்ட சேதம்தான் எங்களுக்குக் கவலை. அவருக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது.
கோட்டாபய அரசில் நிறைய தீர்மானங்களில் மஹிந்த சம்பந்தப்பட்டிருக்கவில்லை. பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் அவர் பொறுப்புக்கூறத் தேவை இல்லை. அதுதான் அரசியல்.
நல்ல விமர்சனங்களை மட்டும் எதிர்பார்க்கக்கூடாது. அப்படியானவர்களால் அரசியல் செய்ய முடியாது. எமது அரசியல் வரலாற்றில் இவ்வாறான பல நிகழ்வுகளை நாம் கடந்து வந்துள்ளோம். இவ்வாறான எல்லா சவால்களையும் எதிர்கொள்ள நான் தயார்.
நல்லாட்சியிலும் நான் பல சவால்களை எதிர்கொண்டேன். என்னை மூன்று தடவைகள் சிறையில் போட்டார்கள். எம்மை அடித்து - கொலை செய்து - வீடுகளுக்குத் தீ வைத்து - அச்சமூட்டி எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது.
அரசியல் அதிகாரம் இருப்பது மக்களின் கைகளில். நாங்கள் அரசியலில் இருக்க வேண்டுமா, இல்லையா என்று அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். காடைத்தனம் ஊடாக எம் அரசியல் பயணத்தைக் தடுக்க முடியாது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியடைந்தே தீரும்" - என்றார்.