சென்னையில் கொட்டும் மழை; விமான நிலைய நிலை என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பலத்த மழை காரணமாக பயணிகளின் உடமைகள், உணவு பொருட்களை ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னையில் இருந்து சென்ற விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்படும் 13 சா்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் வெளிநாடுகள், வெளியூா்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்து தரையிறங்குகின்றதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகா், வட சென்னை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மீனம்பாக்கம் பகுதிகளில் மழையின் அளவு குறைவு. எனவே, சென்னை விமானநிலைய ஓடுபாதைகளில் மழைநீா் தேங்கி நிற்கவில்லை. இதனால், விமான சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை 2015 ஆம் ஆண்டில், சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது, 1,500 பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டனர் மற்றும் 22 விமானங்கள் நீரில் மூழ்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.