தமிழர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் முற்றுகை
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய ஒரு உணவகம் திடீர் சோதனையின் போது கண்டறியப்பட்டதையடுத்து அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டமும் வெள்ளிக்கிழமை (07.11.2025) விதிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது மருத்துவ சான்றிதல் இல்லாமை, உணவக அனுமதிப் பத்திரம் இன்மை, தொழிலாளர்கள் முகச் சவரம் செய்யாமை, தண்ணீர் பகுப்பாய்வு சான்றிதல் இன்மை, கழிவு தொட்டி இல்லாமை, அனுமதி பெறாதமை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் காணப்பட்டன.

கடுமையான சுகாதார மீறல்
மேலும், வெற்றிலை மென்றவாறு உணவு கையாண்டல் போன்ற கடுமையான சுகாதார மீறல்களும் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், குறித்த விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றம் உரிமையாளர்களை குற்றவாளிகளாக இனங்கண்டு, உணவகத்தை சுகாதார சீர்கேடுகள் நிவர்த்தி செய்யும் வரை மூடுமாறு உத்தரவிட்டதுடன், உரிமையாளருக்கு 50,000 ரூபா தண்டம் விதித்ததுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்கள் இடம்பெறாதவாறு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.