கா.பொ.த பரீட்சையில் முதல் முறை சாதனை படைத்த கிழக்கு மாகாணம்!
வரலாற்றில் முதல் முறையாக 2023ம் கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் ஆறாம் இடத்தில் இருந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்றவுடன் கல்வி அமைச்சர் இல்லாத சூழ்நிலையில் கல்வி அமைச்சராகவும் அவர் செயற்பட்டார். பல வருடங்களாக இருந்த கிழக்கு மாகாண கல்வி கொள்கைகளில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார்.
முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான்
கல்விக்கு அவர் வழங்கிய முக்கியத்துவம் இன்று க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்திற்கு முன்னேற முக்கிய காரணியாக திகழ்ந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . இது தொடர்பில் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறுகையில்,
கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும். கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டால் மாத்திரமே பொருளாதாரம் வளரும் எனவும், கல்வி கொள்கையில் பல மாற்றத்தை கொண்டு வந்தேன்.
பல விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. விமர்சனங்களுக்கு அஞ்சினால் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது என்பதை நான் நன்றாக அறிந்தவன்.
என்னதான் நான் கொள்கைகளை நிலைநாட்டி, கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும் அதற்கான முழு பாராட்டுகளும் மாணவர்கள்,ஆசிரியர்கள், அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி செயலாளர், பெற்றோர்கள் என அனைவரையும் சேரும் என தெரிவித்தார்.