உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி விசாரணை ; அரசியல் கோரிக்கை தீவிரம்
உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை கண்டறிய பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சஹ்ரானை இயக்கிய 'அபூ ஹிந்த்' என்ற நபர் மற்றும் தாக்குதலின் பின்னணியில் உள்ள 'மாஸ்டர் மைண்ட்' குறித்து விசாரணைகள் அவசியம்.

இது ஒரு "சதித் திட்டம்" என முன்னாள் சட்டமா அதிபர் கூறியமையயையும் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் ரிஷாத் பதியுதீன் போன்றோர் அரசியல் நோக்கங்களுக்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தற்போதும் விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி நடப்பதாக குற்றம் சுமத்தினார். இத்தாக்குதலால் முஸ்லிம் சமூகம் பாரிய சமூக நெருக்கடிகளையும், கண்காணிப்புகளையும் எதிர்கொண்டது.
சாரா ஜஸ்மினை தப்பவைத்தார் என பொய்க்குற்றச்சாட்டில் சிறை சென்ற அபுபக்கர் போன்ற அப்பாவி மக்கள் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருது வெடிப்பின் போது சாரா ஜஸ்மின் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில், அப்போது அப்பகுதியின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தற்போது அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.
விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டுமாயின், அருண ஜயசேகர தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.