உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நாமல் கடும் பதில்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, 2018/2019 காலப்பகுதியில் சிறையில் இருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ என்பவரைச் சந்தித்தது எந்தவித இரகசிய நடவடிக்கையும் அல்ல என தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை முன்னேற்றம் இன்று (20) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவரது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் தனது ‘X’ (முன்னாள் Twitter) கணக்கில் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில், தாக்குதல் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானைச் சந்தித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, 2018/19 காலப்பகுதியில் பிள்ளையான் சிறையில் இருந்தபோது அவரைச் சந்தித்தது உண்மையானது என்றும், அதற்கான சிறைச்சாலை பதிவுகளை எப்போதும் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் பிள்ளையான் 2015 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2018 உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு தமது கூட்டணியின் பங்காளியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான்
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை தொடர்பாக பிரான்ஸ் வரை சென்றுள்ளதாக கூறப்படுவது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் அதிகாரிகள் இவ்வளவு தூரம் சென்றிருந்தால் அது பொதுப் பணம் வீணடிப்பு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
தற்போது பிள்ளையான் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் அல்ல என்றும், அரசாங்கம் அரசியல் நோக்கில் ஊடக நாடகங்களை நடத்த முயல்கிறதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளை, எந்தவொரு நியாயமான விசாரணைக்கும் முகங்கொடுக்கத் தயார் என்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அரசியல் இலக்குகளுக்குப் பதிலாக நாட்டின் மக்களுக்கு பயனளிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.