உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ;மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையகத்தால், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராக வழங்கப்பட்ட, பரிந்துரைகளைச் செயற்படுத்த உத்தரவிடுமாறு கோரும் மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இணங்கியுள்ளது.
இதனடிப்படையில் குறித்த மனு மீதான விசாரணையை 2026 மார்ச் 24ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
நிலந்த ஜயவர்த்தனவுக்கு எதிரான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கோரி, சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு கோரியே இந்த நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை சமூக மற்றும் மத மையத்தின் இயக்குநர் அருட்தந்தை ரோஹன் சில்வா மற்றும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சூரச் நிலங்க ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணையகம், அரச புலனாய்வு சேவையின் அப்போதைய தலைவராக இருந்த நிலந்த ஜெயவர்தனவுக்கு எதிராகப் பல பரிந்துரைகளை வழங்கியதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
எனினும் இந்தப் பரிந்துரைகளைச் செயற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.