இந்தியா - பாகிஸ்தான் மனோநிலையை உருவாக்கும் கிழக்கு முஸ்லீம் தலைவர்கள்!
கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் அரசியல் தலைவர்கள் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சேவை செய்யும் அரச நிர்வாகம் மற்றும் அரச அதிகாரிகளை இந்தியா - பாகிஸ்தான் மனோ நிலையில் அணுகி கிழக்கில் ஏட்டிக்குப் போட்டியான சூழ்நிலைகளை உருவாக்கி தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் இன முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் செய்ய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய(25) தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் நசீர் அஹமட் அவர்கள் நடந்துகொண்ட விதம் முற்றும் முழுதாக இந்தியா மீதும் தமிழ் மக்கள் மீதும் தனது காழ்வுணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்கள் அமைச்சராகி பல மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு தடவை கூட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு சமூகம் தராத நிலையில் நேற்றைய தினம் (25.07.2023) முதன் முதலாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு வருகை தந்திருந்தார்.
கிழக்கு மாகாண ஆளுநராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்ட நிலையில் அதுவும் அவர் இந்தியாவின் சிபாரிசின் மூலம் நியமிக்கப்பட்டார் என்று கூறப்படும் நிலையில் , கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிரான கருத்தியலை உருவாக்கும் நோக்கில் இந்தியா பாகிஸ்தான் மனநிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகளை அணுகி கிழக்கு மாகாண ஆளுநர் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தை ஆளுநருக்கு எதிராக தூண்டி விடும் பேச்சுக்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில். நேற்றைய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு வருகை தந்த அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்கள் நேரடியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாடுகளை இலக்கு வைத்தும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் விமர்சித்திருந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டம் வடகிழக்கில் வாழும் முஸ்லீம்களின் அபிலாஷைகளை உள்ளடக்கவில்லை அதில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து தற்போது அமைச்சராக இருக்கும் நசீர் அஹமட் அவர்கள் தெரிவித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது.
கிழக்கில் 13 வது திருத்தச் சட்டம் ஊடாக கிடைத்த குறிப்பிட்ட சில அதிகாரங்களை கூட முழுமையாக அனுபவித்தவர் அமைச்சர் நசீர் அஹமட் அவர்களும் முஸ்லீம் சமூகமுமே இவ்வாறான நிலையில் முஸ்லீம் சமூகத்தின் அபிலாஷைகளை 13 வது திருத்தச் சட்டம் உள் வாங்கவில்லை என்று கூறுவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்வி எழுகிறது?
கிழக்கு ஆளுநர் தொடர்பான விமர்சனங்கள்
கிழக்கு மாகாண ஆளுநராக ஒரு பெரும்பான்மை இனத்தவர் இருக்கும் போது வாய் மூடி மௌனிகளாக இருந்த அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் போன்றவர்கள். தற்போது ஒரு தமிழர் நியமிக்கப்பட்டு தமிழ் முஸ்லீம் சமூகங்களுடன் இணைந்து நேரடியாக வும், மிகவும் அன்னியோன்யம் ஆகவும் பணியாற்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் போன்றவர்கள் மீது காழ்வுணர்ச்சியை காட்டுவது எதற்காக?
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் இடமாற்றம் மற்றும் வேறு சில இஸ்லாமிய சமூகத்தின் கல்வி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக எழுந்த பிரச்சினைகளை பூதாகரமாக்கி கிழக்கு மாகாண ஆளுநரை இனவாதியாக காட்ட முற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
ஏறாவூர் நகர சபை நிர்வாகத்திற்கு உட்பட்ட ஏறாவூர் 5 ம் குறிச்சி பகுதியில் 70 வது வருடங்களுக்கு மேலாக வாழும் துப்பரவு பணியாளர்கள் 15 பேரின் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் கோரிக்கையை கூட ஒரு இனவாத செயற்பாடாக கருதி அதனை ஒரு தேசிய பிரச்சினை ஆக்கி ஜனாதிபதி வரை கொண்டு சென்று கலந்துரையாடல் நடத்திய முஸ்லீம் அரசியல் வாதிகளோடும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் முஸ்லீம் சமூகத்தோடும் எப்படி தொடர்ந்தும் இந்த கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழப்போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது?
கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழர் நியமிக்கப்பட்டதை அண்மைக்காலமாக விமர்சித்து வரும் முஸ்லீம் சமூகத்தில் உள்ள சிலரது முகநூல் பக்கங்களை பார்க்கும் போது கிழக்கு மாகாணம் பாகிஸ்தானில் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது? கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆர் எஸ் எஸ் அமைப்பின் முகவர் என சில முகநூல்களில் எழுதப்பட்டுள்ளது.
இதைவிட ஏறாவூர் துப்பரவு தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்கும் தீர்மானத்தை எடுக்கும் போது முஸ்லீம்களின் காணிகளை பறித்து தமிழர்களுக்கு வழங்குவது போன்ற விம்பம் உருவாக்கப்பட்டு ஆளுநர் முஸ்லீம்களுக்கு எதிரானவர் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.
இவற்றுக்கு பின்னால் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்கள் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் நசீர் அஹமட் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசிய மொழி நடைகள் அனைத்தும் அதனை அதனை உறுதிப் படுத்துவதாக இருந்தது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சமூகம் காணி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையே அதே அளவுக்கு அவர்கள் கிழக்கு மாகாணத்தை மத , இன ரீதியாக வேறுபடுத்தி பார்ப்பதும், அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராக நின்றுகொண்டு அரச நிர்வாகம், வளப் பங்கீடுகள் என அனைத்திலும் முஸ்லீம்கள் என்ற வகையில் ஒன்றுபட்டு தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு எதிராக செயற்பட முயற்சிப்பது என்பது தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஒரு வகையான அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.