நுவரெலியாவில் நிலநடுக்கமா ? வெளியான வதந்தி குறித்து பொலிஸார் விளக்கம்
நுவரெலியா சமர்ஹில் தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதியில் புதன்கிழமை (10) இரவு இரண்டு வோட்டர் கீற்றர் (water heater or geyser) ஒரே நேரத்தில் வெடித்து பாரிய சத்தம் வெளிவந்துள்ளன.
சிலர் இதனை நிலநடுக்கம் என சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி, பொதுமக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வதந்திகளைப் பரப்பி உள்ளனர் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா சமர்ஹில் தோட்டத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதியில் இரண்டு வோட்டர் கீற்றரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டுமே ஒரே நேரத்தில் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அதிர்ஷ்டவசமாக விடுதியில் உள்ளவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இதனால் குறித்த விடுதியில் சுவர்களில் ஏராளமான வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சில பொருட்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.
இது நில நடுக்கம் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் வெடிகுண்டு போல் பயங்கர சத்தம் உணரப்பட்டதாகத் தோட்ட பொது மக்களும் நுவரெலியா நகரை சுற்றியுள்ளவர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


