அதிக வெப்பம் குறித்து இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் (Heat Index), “அவதானம் செலுத்தப்பட வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் பகல் வேளையில் அதிக வெப்பத்துக்கு நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தவிர்த்து, போதியளவு நீர் அருந்தி, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.