யாழ். செம்மணி மனித புதைகுழி ; நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை
யாழ்ப்பாணம், ஜூன் 19 – செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும் முறையாகவும் முன்னெடுத்து, கிடைக்கும் சாட்சியங்களை முழுமையாகப் பரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளை இன்று (19) நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
செம்மணி அகழ்வுப் பணிகளில் சர்வதேச நிபுணர்களை இணைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இலங்கையின் குற்றவியல் சட்டம் இவ்வாறான விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு போதுமானதாக உள்ளதாக குறிப்பிட்டார்.

“தற்போது விசாரணைகள் அகழ்வுப் பணிகளின் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. எதிர்காலத்தில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
மேலும், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை மூடுவதற்கான எந்தவித காரணமும் இல்லை என தெரிவித்த அமைச்சர், அந்த அலுவலகம் இல்லையெனில் இவ்வாறான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.
அங்கு பணியாற்றுவோர் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது குறித்து பரிசீலிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த அரசாங்கங்கள் இந்த விவகாரத்தை உரிய முறையில் கையாளத் தவறியதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டு பணிகளை ஒழுங்காக முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
“கடந்த கால செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எங்களை மதிப்பிட வேண்டாம். எமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பார்த்து அவை சரியானவையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்,” என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.