துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு!
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்பி துமிந்த சில்வாவிற்கு, கோட்டாபயவால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன் துமிந்த சில்வாவிற்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதற்கமைய, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ஹிருணிக்கா பிரேமச்சந்திர, அவரின் தாயார் சுமன பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கஸாலி ஹூசைன் ஆகியோர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பிற்கு எதிராக 3 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களின் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.