போதைப் பொருள், ஆயுத கடத்தல் : 10 இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது! நடிகை வரலட்சுமிக்கு சம்மன்
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் நடிகை வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியான குணசேகரன் என்பவரும் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை ஆதிலிங்கம் சினிமாவில் முதலீடு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஆதிலிங்கம் தொடர்பில் விசாரிக்க நடிகை வரலட்சுமி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது.
இதனிடையே நடிகை வரலட்சுமி தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
ஆதிலிங்கத்தின் உறவினர் பாலாஜி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பில் இருப்பதன் மூலமாக விளிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் கடத்திய கும்பலைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது விசாரணயில் உறுதியானது.
குணசேகரன் பினாமியாக லிங்கம் செயல்பட்டு போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மூலமாக வரும் பணத்தை கிரிப்டோ கரன்சியிலும், சினிமாவிலும், அரசியலிலும் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தமிழ் சினிமாக்களில் பிரம்மாண்டமாக போடப்படும் செட்டுகளுக்கு பைனான்சியர்களுக்கு பண நிதியுதவி அளித்ததும் தெரியவந்துள்ளது.
விளிஞ்சம் கடற்கரைப் பகுதியில் 327 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே-47 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 10 இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு தேசிய குற்றப்புலனாய்வு முகமை அதிகாரிகளால் குற்றம் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் 14வது நபராக லிங்கம் என்கிற ஆதி லிங்கத்தை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.