ஐஸ் போதைப்பொருள் கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை
ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல நேற்று (09) 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த 21 வயது இளைஞருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது பொலிஸாரால் மன்னார், எழுத்தூர் சந்திக்கு அருகில் இந்த பிரதிவாதி கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர், சட்டமா அதிபர் 2008 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.
விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்குத் தொடுனரால் பிரதிவாதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதன்படி, இந்த தண்டனை பிரதிவாதிக்கு விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.