போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடும் தண்டனை நிச்சயம் ; ஆனந்த விஜயபால
சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கத்தின் இந்த உறுதியான நடவடிக்கைகளைக் கண்டு பயமடைந்துள்ள எதிர்த்தரப்பினர் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்த போதிலும், எந்தவொரு சவாலுக்கும் அஞ்சாமல் போதைப்பொருள் ஒழிப்புக்காக எடுக்கப்பட்ட 16 முக்கிய தீர்மானங்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல் சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

போதைப்பொருள் வர்த்தகம்
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த பல ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் ஆதரவு, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்களுக்கு இடையிலான பிணைப்பு தற்போது முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிராக மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டு 14,125 மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களைக் வெறும் குற்றவாளிகளாகக் கருதி கைது செய்து சிறையில் அடைப்பதால் எவ்வித பலனும் இல்லை என்பதால், அவர்களை நோயாளர்களாகக் கருதி முறையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது மட்டுமே சட்டத்தின் முழுமையான அதிகாரம் பயன்படுத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பிராந்திய பொலிஸ் நிலையங்கள் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சரியான செயற்பாடு காணப்படாவிட்டால், வேறு பொலிஸ் பிரிவுகளையோ அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படையையோ பயன்படுத்தி சோதனைகள் நடத்தப்படும்.
அரச பணிக்காக 50 முறை பரீட்சை ; பட்டதாரி இளைஞரின் விபரீத முடிவு ; கண் கலங்க வைக்கும் தந்தைக்கான இறுதி கடிதம்
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பெறப்படும் தகவல்களை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது.
நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்கும் இந்தத் தேசியப் பணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், போதைப்பொருள் விவகாரத்தில் அதற்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அல்லது சாதகமாகச் செயற்படுபவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவோ அல்லது அதற்குத் துணை செல்பவர்களாக மட்டுமே கருதப்படுவார்கள் என்றார்.