வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் நண்பர் கைது
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுமான வெலிஓயா பிரியந்த மற்றும் S.F ஜகத் ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள்
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், கையடக்க தொலைபேசி மற்றும் 2 இலத்திரனியல் தராசுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்த கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பம்பலப்பிட்டி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்துக்கொண்டு உந்துருளியில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அடுத்து, வெள்ளவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போதே, ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏனைய பொருட்களை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.