அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி
இன்று (06) அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 339.88 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (03) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 340.44 ஆக காணப்பட்டது.

கடந்த ஜூன் 23-ஆம் திகதிக்குப் பிறகு, முதன்முறையாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை திங்கட்கிழமை (06) அன்று 340 ரூபாய் மட்டத்திற்குக் கீழ் குறைவடைந்துள்ளது.
2026 ஜூலை 03-ஆம் திகதியுடன் முடிவடைந்த இந்த வருடத்தின் காலப்பகுதியில், இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 7.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2026 ஜூன் மாதம் முழுவதும் இலங்கை ரூபாய் மீது காணப்பட்ட அந்நிய செலாவணி அழுத்தம், தற்போது படிப்படியாகக் குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.