பின்னோக்கி சென்று ஐந்து பிள்ளைகளின் தந்தை படைத்த சாதனை!
இலங்கையில் முச்சக்கரவண்டியை பின்னோக்கி செலுத்தி ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
புத்தளம் - முந்தல், முக்குத்தொடுவாய் பிரதேசத்தை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான நிஷாந்த பண்டார , முச்சக்கரவண்டியை 88 கிலோமீற்றர் தூரத்தில் பின்னோக்கி செலுத்தி சாதனை படைத்துள்ளார்.
நிஷாந்த பண்டார மூன்று மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் 47 வினாடிகளில், முச்சக்கரவண்டியை பின்னோக்கி ஓட்டி சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
செரண்டிகப் உலக சாதனை
செரண்டிகப் உலக சாதனை நிறுவனத்தின் கண்காணிப்பாளரின் முன்னிலையில் நிஷாந்த பண்டார இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார் நிஷாந்த பண்டார இலங்கை விமானப்படையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் எனவும் தற்போது முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரிவதாகவும் தெரியவருகின்றது.
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவின் பணிப்புரையின் பேரில் முந்தல், மதுரங்குளி, நுரைச்சோலை மற்றும் கல்பிட்டி பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் வீதிகளை முறையாக தயார் செய்து நிஷாந்தவின் பணியை வெற்றியடையச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.
முந்தல், முக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து, மதுரங்குளிக்கு வந்து கல்பிட்டி வீதி பாலவி சந்தியில் இருந்து பாலக்குடா சந்திக்கு திரும்பி தலவில தேவாலயத்திற்குச் சென்று மீண்டும் முக்குத்தொடுவாய் திரும்பி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.