விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு அதிரடி காட்டிய பொலிஸார்
கல்கிஸ்சை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்ற 19 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியை கல்கிஸ்சை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய காணொளி மற்றும் சிசிரிவி காட்சிகளின் உதவியுடன், கடந்த செவ்வாய்க்கிழமை (21) சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர்.

வைரலான காணொளி
இந்த விபத்து ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டி, விபத்துக்குப் பின் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸாரால் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் வைரலான காணொளி மற்றும் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களை ஆய்வு செய்ததன் மூலம், சந்தேக நபரையும் விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் அடையாளம் கண்டனர்.
கைது செய்யப்பட்டவர் இரத்மலானை, போருப்பனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் புதன்கிழமை (22) கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்கிஸ்சை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.