தாய்க்கும் குழந்தைக்கும் நேர்ந்த துயரம் ; காருக்குள் கிடைத்த பொருட்களால் சிக்கிய சாரதி
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் வட்டக்கள்ளிய பகுதியில் காரொன்று, மேலும் இரண்டு வாகனங்களுடன் மோதி, வீதியோரத்தில் நின்ற பெண் ஒருவரையும் குழந்தையையும் மோதித் தள்ளி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (19) பிற்பகல் 4.30 மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளதுடன், சிலாபம் பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொண்டு மீண்டும் முந்தல், பரலன்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த சாரதியினால் செலுத்தப்பட்ட காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவப் பரிசோதனை
குறித்த கார் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொரு காருடன் மோதியுள்ளதுடன், மோதியதைத் தொடர்ந்து டிப்பர் ரக வாகனத்துடனும் மோதியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த கார் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் நின்ற தாயையும் குழந்தையையும் மோதித் தள்ளி சிலாபம் நகரப் பெயர்ப் பலகையிலும் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
வாகனத்தில் இருந்து மதுபானப் போத்தல்கள் உள்ளிட்ட மது அருந்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கோப்பைகள் மற்றும் ஏனைய பான வகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
காரும் அதன் சாரதியும் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த தாயும், குழந்தையும் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.