சுரேஸ் சாலேவை காப்பாற்ற மனைவி ஆடும் நாடகம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலேயின் மனைவி மனோரி சாலே, அந்த விசாரணையை திசைதிருப்பும் விதமாகவும், கணவனை விசாரணையிலிருந்து தப்பவைக்கவும் மனோரி சாலே பலவேறு முயற்சிகளின் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில், தற்போது குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புக்கான தேசிய அதிகார சபைக்கு ஒரு புகாரை சமர்ப்பித்துள்ளார்.

தானும் தனது இரண்டு பிள்ளைகளும் கண்காணிக்கப்படுவதாக குற்றம்
அதில், தம்மை கண்காணிப்பதாகவும், குற்றப் புலனாய்வுத் துறையுடன் நேரடியாகத் தொடர்புடையவர் என்றும் சந்தேகிக்கப்படும், சாதாரண உடை அணிந்த ஒரு குறிப்பிட்ட நபரால், தானும் தனது இரண்டு பிள்ளைகளும் மீண்டும் மீண்டும் பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதன்படி, அவரது 17 வயது இளைய மகளும் 22 வயது மூத்த மகனும் தங்கள் தந்தையின் நலனைப் பற்றி விசாரிப்பதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்குச் சென்றபோது, அந்த சந்தேக நபர் பிள்ளைகளைப் பின்தொடர்ந்து, அவர்களைப் புகைப்படம் எடுத்தார் என சாலேயின் மனைவி மனோரி சாலே புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை வளாகங்களுக்கு அருகே இந்த நபர் இதற்கு முன்னர் பலமுறை தொடர்ந்து சுற்றித் திரிவதை தாம் தெளிவாகக் கவனித்ததாகவும் மனைவி மனோரி சாலேகூறுகிறார்.
நாட்டில் நிலவும் இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில், குற்றத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையானது, இவ்விஷயம் குறித்து உடனடியாக ஒரு சுதந்திரமான மற்றும் முறையான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு , ஒளிப்பதிவுக் கருவிகளுடன் தன்னைப் பின்தொடரும் அந்த நபரைத் துல்லியமாக அடையாளம் காண வேண்டும் என்றும், அரச நிறுவனங்களின் இத்தகைய இரகசிய நடவடிக்கைகள் யாருடைய உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட அறிவுறுத்தல்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டன என்பதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்ட வேண்டும் என்றும் மனோரி சாலே வலியுறுத்துகிறார்.
சுரேஷ் சாலே புலனாய்வு பிரதானியாக பணியாற்றிய போது, இதேபோல பல சம்பவங்களில் ஈடுபட்ட விடயங்கள் தற்போது வெளியாகி வருகின்றது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய சுரேஷ் சாலே கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.