மீண்டும் தலைதூக்கும் வரதட்சணை கொடுமை ; 23 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை
இந்தியாவில் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் பட்டுல், கணவர் குடும்பத்தினரின் வரதட்சணை தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கொடுமை
பட்டுலுக்கும், உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பர்சியா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே 8ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர், பட்டுல் தனது கணவருடன் பர்சியா கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் கூடுதல் வரதட்சணை கோரி கணவர் ரோகித், அவரது தாயார் சந்திரவதி தேவி, சகோதரி ரூபி தேவி மற்றும் அவரது கணவன் ஆகியோர் பட்டுலுக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்த தொல்லைகளால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான பட்டுல், நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், பட்டுலின் மாமியார் சந்திரவதி தேவியை கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கணவர் ரோகித் உட்பட மேலும் மூன்று பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.