வரதட்சணை கொடுமை; 27 வயதான இளம் தாயின் அதிர்ச்சி முடிவு
வரதட்சணை கொடுமையால் 27 வயதான ஒரு பிள்ளையின் தாய் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெங்களூருவில் இடம்பெற்ற இசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா (வயது 27). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷில்பா தற்போது கர்ப்பமாக இருந்தார்.
ஷிப்லாவும், பிரவீனும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருமணத்தின்போது ரூ. 50 லட்சம் வரதட்சணயாக ஷில்பா குடும்பத்தினர் பிரவீனுக்கு கொடுத்துள்ளனர்.
ஐ.டி. வேலை ராஜினாமா
இதனிடையே, திருமணமான ஒராண்டில் பிரவீன் ஐ.டி. வேலையை ராஜினாமா செய்துவிட்டு பானிபுரி உணவக தொழில் தொடங்கினார். இந்த தொழில் தொடங்க பணம் தரும்படி ஷில்பாவிடம் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, ரூ. 10 லட்சம் ஷில்பா குடும்பத்தினர் பிரவீனுக்கு கொடுத்துள்ளனர். அதன்பின்னரும், ஷில்பாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரவீனும் அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால், பிரவீனுடன் வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு ஷில்பா சென்றிருந்ததும், பின்னர் பிரவீன் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி அழைத்து வந்ததும் தெரியவந்தது. ஆனாலும், தொடர்ந்து ஷில்பாவுக்கு பிரவீன் குடும்பத்தினர் வரதட்சணை தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் ஷில்பா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ஷில்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக ஷில்பாவின் கணவன் பிரவீன், அவரது தாய் சாந்தா மற்றும் தங்கை பிரியா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருந்த பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.