கிளிநொச்சியில் நடந்தது என்ன? மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்ற அமைச்சர் டக்ளஸ்!
கிளிநொச்சி - பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் கடும் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (05-04-2024) பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி – பூநகரி, பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன்போது அமைதியின்மை ஏற்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் அதனை கட்டுப்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது.
ஆயினும், மக்களின் கடும் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திரும்பியுள்ளார்.
இதேவேளை தமது பிரதேசத்திற்கு 6 பேருந்துகளில் வந்த டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் தம்மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதாக அப்பகுதி மக்கள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்கள்.