எரிபொருள் கொடுப்பனவு வேண்டாம் ; பிரதமர் உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உதவிப் பொதுச் செயலாளரும் தகவல் அதிகாரியுமான ஹன்ச அபேரத்ன இந்த விபரங்களை வழங்கியுள்ளார்.
எரிபொருள் கொடுப்பனவு
அதன்படி, இந்த 48 பேரில், 13 பேர் கடந்த மார்ச் மாதம் முதல் தமது கொடுப்பனவை நிறுத்துமாறும் 16 பேர் ஏப்ரல் மாதம் முதல் நிறுத்துமாறும் கோரியுள்ளனர், மீதமுள்ளோர் மே, ஜூன், ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இருந்து எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தக் கோரியுள்ளனர்.
மேலும், அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர், வசந்த சமரசிங்க, அனில் ஜயந்த, தம்மிக பட்டபெந்தி, நாமல் கருணாரத்ன, மற்றும் உபாலி சமரசிங்க ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் முதலே தமக்கு எரிபொருள் கொடுப்பனவு தேவையில்லை என நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதேவேளை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு, மாதாந்த கொடுப்பனவுகளாக ரூ. 54,285, மாதாந்த வரவேற்பு கொடுப்பனவாக ரூ. 1,000, தொலைபேசிக் கொடுப்பனவாக ரூ. 50,000, போக்குவரத்துச் செலவுக் கொடுப்பனவாக ரூ. 15,000, அலுவலகக் கொடுப்பனவாக ரூ. 1,00,000 மற்றும் நாடாளுமன்ற வருகை கொடுப்பனவாக ரூ. 2,500 வழங்கப்படுகின்றன.
இவற்றுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. அதேநேரம், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 419.76 லீற்றர் டீசல் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.