ஆடி அமாவாசை நாளான இன்று மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.
என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி மாத அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அதுவும் இந்த மாதத்தில் வரும் அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், பித்ரு காரியம் செய்ய, திதி கொடுக்க உகந்த நாளாகும். சொல்லப்போனால் எந்த அமாவாசையிலும் பித்ருக்களுக்கு எந்த ஒரு திதி கொடுக்காவிட்டாலும், இந்த அமாவாசையில் காரியம் செய்வதால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டின் ஆடி அமாவாசை இன்றைய நாளான ஆகஸ்ட் 12 ஆம் திகதி வருகிறது. இந்நாளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எதை செய்யக்கூடாது என்பது நிச்சயம் பலருக்கு தெரிந்திருக்காது. எவ்வாறான விடயங்களை ஆடி அமாவாசை நாளில் செய்யக்கூடாதவைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.

தர்ப்பணத்திற்கு முன் கோலம் கூடாது
ஆடி அமாவாசை நாளானது இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் செய்யும் நாளாகும். இந்நாளில் தர்ப்பணம் செய்வதற்கு முன் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. எனவே ஆடி அமாவாசை நாளில் வீட்டில் திதி அல்லது தர்ப்பணம் செய்யும் வரை கோலம் போடாதீர்கள்.
சுப காரியங்களைத் தவிர்க்கவும்
அமாவாசை நாளானது முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய உகந்த நாள் என்பதால், இந்நாளில் சுப காரியங்களான திருமண பேச்சு வார்த்தை, புதுமனை புகுவிழா நடத்துவது, புதிய தொழிலை தொடங்குவது, வீடு, வாகனம் வாங்குவது போன்ற சுப காரியங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு பாரம்பரிய நடைமுறை.
அசைவ உணவுகள் கூடாது
ஆடி அமாவாசை நாளில் வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது அல்லது அசைவ உணவை வெளியில் வாங்கி உண்பது போன்றவற்றை தவிர்ப்பது வழக்கம். அதேப் போல் சைவ உணவை உண்பவர்கள் வெங்காயம், பூண்டு, காலிஃப்ளவர், முருங்கை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் தாமச குணம் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே எளிமையான உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.
ஷேவிங் மற்றும் முடி வெட்டுவது
கூடாது ஆடி அமாவாசை நாளில் ஷேவிங் செய்வது, முடி வெட்டுவது, ட்ரிம் செய்வது, நகம் வெட்டுவது போன்றவற்றை செய்யாமல் இருப்பது நல்லது. சில வீடுகளில் தாய் தந்தை உள்ளவர்கள் அமாவாசை நாளில் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பதைத் தவிர்ப்பார்கள்.
உணவை வீணாக்கக்கூடாது
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்கள் ஏதாவது ஒரு வடிவில் நம்மை சுற்றி வருவார்கள் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட நாளில் காகத்திற்கு உணவளிப்பது, ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்வது போன்ற நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். அதை விடுத்து அமாவாசை நாளன்று வீட்டில் சமைத்த உணவை வீணாக்காமல் அளவாக சமைத்து சாப்பிடுங்கள். ஒருவேளை சாதம் மீந்து போனால், பசியுடன் இருப்பவர்களுக்கு அதை கொடுங்கள்.