யாழிலிருந்து கதிர்காமத்திற்கு 33 நாட்களாக பாதயாத்திரீகர்களுடன் பயணிக்கும் நாய்
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி நடைபெற்று வரும் வருடாந்த பாதயாத்திரையில், கடந்த 33 நாட்களாக பக்தர்களுடன் இணைந்து பயணித்து வரும் “சுப்பிரமணியம்” என்ற நாய் தற்போது சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாதயாத்திரீகர்களுடன் தொடர்ந்து பயணித்து வரும் இந்த நாயைக் காண வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சில இடங்களில் பாதயாத்திரீகர்களை விட “சுப்பிரமணியம்” நாயைக் காண ஆர்வம் காட்டும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதயாத்திரைக் குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை – தண்ணீரூற்று பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த நாய் தானாகவே அணியுடன் இணைந்ததாகக் குறிப்பிட்டார்.
“நாயின் உரிமையாளர் யார் என்பது எமக்குத் தெரியாது. அது தன்னிச்சையாக எங்களுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கியது. பின்னர் அதற்கு ‘சுப்பிரமணியம்’ எனப் பெயரிட்டு, கழுத்தில் பட்டுக் கட்டி, விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு அழைத்து வந்தோம்,” என அவர் தெரிவித்தார்.
பாதயாத்திரை முழுவதும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவுகள், பால், பிஸ்கட் மற்றும் ரொட்டி போன்ற சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
திருகோணமலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது நாய் உடல்நலக் குறைவுக்கு உள்ளான நிலையில், அங்குள்ள கால்நடை வைத்தியரிடம் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் மீண்டும் குழுவுடன் இணைந்து பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பக்தர்களுக்கு முன்னால் சென்று வழிகாட்டும் வகையில் பயணித்து வரும் இந்த நாய், பாதயாத்திரையில் பங்கேற்போரிடையே ஆன்மீக உணர்வையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்றான “சுப்பிரமணியம்” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நாய், கதிர்காமத்தை நோக்கிய தனது நீண்ட பயணத்தால் சமூக ஊடகங்களில் வைரலாகி, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பரவலாக பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.