யாழில் நாய்களுக்கு காப்பகம் ; நிறைவேற்றப்பட்ட பிரேரணை
சாகசக்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்க வேண்டும் என்று சாவகச்சேரி நகரசபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற போது நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையினை முன்வைத்தார்.
கட்டாக்காலி நாய்கள்
நகரத்தில் கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்குவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றது. ஆகையால் நாய்களை நகரத்தில் இருந்து அகற்றி கருத்தடை செய்து பாராமரிக்க வேண்டிய தேவை உள்ளது.
வெறுமனே வீதிகளில் திரிகின்ற நாய்களுக்கு உணவினை போடுவது மட்டும் ஜீவகாருண்யம் இல்லை. நாய்களை உரிய முறையில் சிகிச்சையளித்து கருத்தடை செய்து பராமரிக்க வேண்டும். எனவே எமது நகரசபை எல்லைக்குள் உள்ள கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு கால்நடை வைத்தியசாலை அமைந்துள்ள சூழலில் நாய்கள் காப்பகம் ஒன்றை அமைக்கவேண்டும்.
இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நாய்கள் காப்பகம் அமைக்கும் பணியை எமது சாவகச்சேரி நகராட்சி மன்றமே முதன்முதலில் முன்னெடுக்கின்றது.
அதனால் பல்வேறு தரப்பினரும் எமது முன்மாதிரியான வேலைத்திட்டத்திற்கு பெரும் பங்களிப்பினை வழங்குவார்கள் என்று உபதவிசாளர் கிஷோர் தனது பிரேரணையை முன்வைத்து தெரிவித்தார்.
குறித்த பிரேரணையை வரவேற்ற சபை உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தனியார் அமைப்புக்கள் நாய்கள் காப்பகம் அமைத்து இடைநடுவில் கைவிட்டதினை போலல்லாமல் சிறப்பாக தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து பிரேரணையினை ஏகமனதாக நிறைவேற்றினர்