AI பயன்பாட்டில் இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? உலக வங்கி வெளியிட்ட அறிக்கை
தெற்காசியாவில் ChatGPT யை அதிகமாக பயன்படுத்தும் நாடாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதாகவும், தெற்காசியாவின் AI பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பில் உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது
அந்த அறிக்கையின்படி, தெற்காசியாவில் நேபாளம் மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, அதிக AI பயன்படுத்துவோர் கொண்ட தொழிலாளர் சக்தியைக் கொண்ட நாடுகளாக பூட்டானும் இலங்கையும் மாறியுள்ளன.

இலங்கையில் AI மனித திறன்களுடன் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதில் குறைந்த முன்னேற்றம் இருப்பதையும், திறன்களை மேம்படுத்தாமல் AI விரைவாக பயன்படுத்தப்படுமானால் வேலை இழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
AI காரணமாகவே, தெற்காசியாவில் வேலைவாய்ப்புகளில் சுமார் 7% பணிகள் ஆபத்தில் உள்ளன. குறிப்பாக அழைப்பு மைய அதிகாரிகள், கணக்காளர்கள், கணினி மென்பொருள் தொடர்புடைய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறைந்துள்ளன.
ChatGPT யை பயன்படுத்தும் அதிக மக்கள் உள்ள நாடாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மாலைத்தீவு முதலிடத்தில் உள்ளதோடு, இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா காணப்படுகிறது.
மேலும் 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அனைத்து தொழில்முறை மற்றும் நிர்வாக வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் 7.3 சதவீதத்திற்கு AI தொடர்பான திறன்கள் தேவைப்பட்டுள்ளன. இது பிராந்தியத்திலேயே அதிகபட்ச பங்கு என்றும், இந்தியாவில் இது 5.8% ஐத் தாண்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளில் பரவி, தொழில்முறை மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) சேவைத் துறைகளில் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் நிதித் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு AI பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், இலங்கையில் வலுவான AI வேலைவாய்ப்புச் சந்தை இருக்க வேண்டும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
அதன்படி, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல், STEM கல்வியை விரிவுபடுத்துதல், நம்பகமான மின்சாரம் மற்றும் இணைய உட்கட்டமைப்பில் முதலீடு செய்தல், அத்துடன் தொழிலாளர் நகர்வு மற்றும் வேலைவாய்ப்பு வசதி அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.