கொரோனா தடுப்பூசிக்கு சென்றவருக்கு நாய் ஊசி செலுத்திய மருத்துவர்! பெரும் அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி செலுத்த சென்றவருக்கு வெறிநாய் கடிக்கு செலுத்தப்படும் ஊசி மருந்து செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே கல்வா அட்கோன்னேஷ்வர் நகர் பகுதியில் ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அங்குள்ள ஒரு சுகாதார நிலையத்திற்கு சென்றார். இதன்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் செவிலியர் கீர்த்தி ராயத் ஆகியோர் ராஜ்குமார் யாதவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
அதன் பின்னரே ராஜ்குமார் யாதவ்விற்கு செலுத்திய மருந்து பாட்டிலை கவனித்தபோது, அது கொரோனாவுக்கான தடுப்பூசி இல்லை என்பதும், வெறிநாய் கடிக்கு செலுத்தப்படும் ரேபிஸ் ஊசி மருந்து என்பதும் தெரியவந்தது.
இது குறித்து ராஜ்குமார் யாதவ் தானே மாநகராட்சியில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அதற்கு காரணமாக இருந்த டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் செவிலியர் கீர்த்தி ஆகிய 2 பேரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்தனர்.
மேலும் அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் , தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.